புதுடில்லி: கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்காக நிலம் கையகப்படுத்திய முடிவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் குடியிருக்கும் சிலர், 1988-ல் உப்பிலிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் வீட்டு வசதி திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு 11.95 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. அதற்கு எதிராக, 2008-ல் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, நிலம் கையகப்படுத்தியதை ரத்து செய்தது. பின்னர், அந்த உத்தரவை இரு நீதிபதிகளின் அமர்வும் உறுதி செய்தது. அதன் பிறகு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இந்த உத்தரவை உச்ச நீதிமன்றத்தில் சவால் செய்தது.
இந்த வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோரால் நடைபெற்றது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும் அரசு வழக்கறிஞர் இந்திரா, மனுவை ஏற்றுக் கொண்டு அரசின் உத்தரவை உறுதி செய்ய வேண்டும் என வாதிட்டனர். இதன் பின்னர், உச்ச நீதிமன்றம் நிலம் கையகப்படுத்தியதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது.