டெல்லி: நாடு முழுவதும் டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. கடைசி கட்ட கவுன்சிலிங்கிற்கு பிறகு காலி இடங்கள் இருந்தால் சிறப்பு கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முழுமையாக முடிக்கப்படவில்லை. இன்னும் பல இடங்கள் காலியாக உள்ளன.
இதையடுத்து, கவுன்சிலிங் முடிந்து காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்பக் கோரி, லக்னோ மருத்துவக் கல்லூரி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடைசி கட்ட கவுன்சிலிங்கிற்கு பிறகு காலி இடங்கள் இருந்தால் சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர். அவர்கள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:- நாடு முழுவதும் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், முழு சேர்க்கை நடத்தாமல் இருப்பது தவறு. எனவே, மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை இம்மாதம் 30-ம் தேதிக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரச்னை எதுவாக இருந்தாலும், அதைத் தீர்க்க சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்தப்பட்டு, அனைத்து மாணவர்களுக்கும் சேர்க்கை செயல்முறையை முடிக்க வேண்டும். காலியாக உள்ள என்ஆர்ஐ இடங்களை கூட பொதுப்பிரிவு கவுன்சிலிங்கில் நிரப்பலாம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.