திருப்பூர் : தமிழகம் முழுவதும், பள்ளிக் கல்வித்துறை சார்பில், 6 முதல், 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கடந்த, 9-ம் தேதி துவங்கிய அரையாண்டுத் தேர்வு, இன்றுடன் முடிவடைகிறது. இதேபோல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 10-ம் தேதி துவங்கிய தேர்வும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 9-ம் தேதி துவங்கிய அரையாண்டு தேர்வும் இன்றுடன் முடிவடைகிறது.
இன்றுடன் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிவடைய உள்ளதால், நாளை முதல் ஜனவரி 1-ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது. இந்த அரையாண்டு தேர்வு விடுமுறையில் மாணவர்களுக்கு, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் வருகின்றன. இதை கொண்டாட மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இந்த விழாக்கள் மட்டுமின்றி, பள்ளி திறக்கப்பட்ட சில நாட்களில் பொங்கல் பண்டிகையும் வருகிறது.
இதற்கான ஆயத்தமாக, சொந்த ஊர் செல்ல புத்தாடைகள் வாங்குவது, டிக்கெட் முன்பதிவு செய்வது உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்ய உள்ளனர். விடுமுறை நாட்களை கொண்டாட்டங்களுக்கு மட்டுமின்றி பயனுள்ளதாக அமைய வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். புத்தகங்கள் தவிர, மாணவர்களின் கைகளில் இணைய வசதி கொண்ட செல்போன்கள் அதிகம். பயனற்ற விஷயங்களைக் கற்றுக்கொண்டு நேரத்தை வீணடிக்காமல் இணையத்தை திறம்பட பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
இது வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், மாணவர்கள் தங்களது தனித் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு அம்சங்கள் இணையத்தில் உள்ளன. ஆசிரியர்களால் எளிய முறையில் கற்பிக்க முடியாத கல்வியைக் கூட இணையதளங்கள் இப்போது கற்றுத் தருகின்றன. அதேபோல், பள்ளி, கல்லூரிகளில் இல்லாத கல்வியை இணையதளத்தில் தேடிக் கற்றுக்கொள்வதன் மூலம் மாணவர்கள் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்வதோடு, புத்தகங்களில் உள்ள படங்களை மனப்பாடம் செய்து சமூகத்தில் தனித்து நிற்கவும் முடியாது. எனவே, அதற்கேற்ப இணையதளங்களை பயன்படுத்துவோர், தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் பயனுள்ள தகவல்களை சேகரித்து கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசிரியர்கள் அறிவுறுத்துகின்றனர்.