காபூல்: ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 15 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது பக்கத்து நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் சமீபகாலமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்கள் ஆதரவளித்து வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டை தலிபான் அரசு மறுத்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு எல்லையையொட்டி ஆப்கானிஸ்தான் பத்திகா மாகாணம் பர்மால் மாவட்டத்தில் உள்ள லேமன் உள்ளிட்ட 7 கிராமங்கள் மீது பாகிஸ்தான் அதிரடி வான் வழித் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து சரமாரியாக குண்டுகளை வீசியது. இந்த குண்டு வீச்சில் பர்மால் முர்க்பஜார் கிராமம் முற்றிலும் உருக்குலைந்தது. வீடுகள் கடும் சேதம் அடைந்தது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் பலியகி உள்ளனர். இவர்களில் 5 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். பலரை காணவில்லை. படுகாயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் இந்த செயலுக்கு ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஆப்கானிஸ்தான் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலை பாகிஸ்தான் இன்னும் உறுதிபடுத்தவில்லை. ஆனால் எல்லைக்கு அருகில் உள்ள பயங்கரவாத அமைப்பினரின் மறைவிடங்களை குறிபார்த்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.