சென்னை: தமிழகத்தில் எங்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை மீண்டும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வெளிவந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்துள்ள இந்த விரும்பத்தகாத சம்பவம், அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் அனைத்து மாணவிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தமிழகத்தில் எங்கும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது அம்மாநிலத் தலைநகர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவிக்கு நடந்த இந்தச் சம்பவம். எனவே, அண்ணா பல்கலைகழக நிர்வாகமும், தமிழக அரசும், பல்கலை வளாகத்திற்குள் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, எதிர்காலத்தில் அனைத்து மாணவர்களும் பாதுகாப்பான சூழலில் படிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்,” என்றார்.