புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் கிரிநகரில் உள்ள காய்கறி சந்தையில் இல்லத்தரசிகளுடன் உரையாடும் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். மேலும், “சில நாட்களுக்கு முன்பு, உள்ளூர் காய்கறி சந்தைக்கு சென்றிருந்தேன். அங்கு பொதுமக்களிடம் உரையாடினேன்.
சாமானியர்களின் பட்ஜெட் எப்படி மோசமடைந்து வருகிறது, பணவீக்கம் எப்படி அனைவரையும் பாதிக்கிறது என்பதை அறிய விற்பனையாளர்களிடம் பேசினேன். விலைவாசி உயர்வால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். அன்றாடத் தேவைகளில் சிறிய விஷயங்களில் கூட சமரசம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பூண்டு, பட்டாணி, காளான் மற்றும் இதர காய்கறிகளின் விலை குறித்து விவாதித்தோம். மக்களின் உண்மையான அனுபவங்களைக் கேட்டேன். பூண்டு கிலோ ரூ.400, பட்டாணி கிலோ ரூ.120 என அனைவரின் பட்ஜெட்டையும் அதிர வைத்துள்ளது. மக்கள் என்ன சாப்பிடுவார்கள், எதைச் சேமிப்பார்கள் என்று யோசித்தேன்.
ஒரு காலத்தில் பூண்டு விலை ரூ.40 ஆக இருந்தது. ஆனால் இன்று? கிலோ ரூ.400. பணவீக்கம் சாமானியர்களின் சமையலறையின் பட்ஜெட்டை அழித்துவிட்டது. ஆனால் மத்திய அரசு கும்பகர்ணனைப் போல் தூங்குகிறது” என்று பதிவிட்டுள்ளார்.