விழுப்புரம்: வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:- கர்நாடகா, பீகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
ஆனால் தமிழகத்தில் நடத்தப்படவில்லை. மகாத்மா காந்தி 27 ஆண்டுகள் சுதந்திரத்திற்காக போராடினார். வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக 45 ஆண்டுகளாக போராடி வருகிறேன். அரசு ஊழியர்களை பயன்படுத்தி ஒரே மாதத்தில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தலாம்.
இதற்கு ₹500 கோடி செலவாகும். ஜாதி வாரியாக 3 முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருந்தது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அமைக்கப்பட்ட கமிஷன் பணி நீட்டிப்பு வழங்கப்படாததால் காலாவதியானது. எம்ஜிஆர் ஆட்சியில் வன்னியர்களுக்கு 13 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்தார். அவருடன் இருந்தவர்கள் இது தொடர்பான கோப்புகளை மறைத்து வைத்தனர். தற்போது 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி போராடி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.