மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதங்கள், கடற்கரை கோவில் உள்ளிட்ட பல்வேறு புராதன சின்னங்களை பார்வையிட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இத்தகைய சுற்றுலாப் பயணிகள் இந்திய பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளைப் பார்த்து ரசிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில், மத்திய, தமிழக சுற்றுலாத் துறைகள் இணைந்து, பல ஆண்டுகளாக, டிச., முதல், ஜனவரி வரை, நடன விழாவை நடத்தி வருகின்றன. இந்த திருவிழா கடந்த 22-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், 5-வது நாளான நேற்று, கடலூர் சங்கர் சாரல் கலைக்கூடம் குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சி, சென்னை ஸ்ரீ பவானி நாட்டியாலயா குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி, பொன்னேரியின் கிராமிய கலை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கலைஞர்கள் நிகழ்த்தினர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் உள்ளூர், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திருவிழாவை ஆர்வமுடன் கண்டு களித்தனர். சொகுசுப் பேருந்துகள், கார்கள், வேன்கள், அரசுப் பேருந்துகள் போன்றவற்றில் வெளிநாட்டினர் குவிந்து விழாவைக் காணச் செல்வதால் மாமல்லபுரமும் நிரம்பி வழிகிறது.