சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் சாலைகளில் மழை நீர் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் நேற்றிரவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், நேற்று இரவு 10 மணி அளவில் சென்னையின் பல பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது.
சில இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை முதல் மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், தற்போது சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதை அடுத்து, தண்ணீரை அகற்றும் பணி விறுவிறுப்பாக நடந்து வருவதாக தெரிகிறது.