தேவையான பொருட்கள்:
கடலை எண்ணெய் – 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
பூண்டு – 15 பல்
சின்ன வெங்காயம் – 10
கறிவேப்பிலை – 1 கொத்து
தக்காளி – 1 (நறுக்கியது)
குழம்பு மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்
கத்திரிக்காய் – 150 கிராம் (நீளவாக்கில் வெட்டியது) முருங்கைக்காய் – 1 (வெட்டியது)
புளி – 1 பெரிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ள வேண்டும்)
உப்பு – தேவையான அளவு
நெத்திலி கருவாடு – 100 கிராம்
செய்முறை:
முதலில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை நன்கு மென்மையாக தட்டிக் கொள்ள வேண்டும். பின் கருவாட்டை சுடுநீரில் போட்டு, அதில் உள்ள செதில்களை நீக்கிவிட்டு சுத்தம் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு புளியை நீரில் ஊற வைத்து, அதை கரைத்து சாறு எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து, கறிவேப்பிலை தூவி நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின்பு அதில் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து குறைவான தீயில் வைத்து, 1 நிமிடம் கிளறி விட வேண்டும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காயை சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க வேண்டும். அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். குழம்பு நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுத்தம் செய்து வைத்துள்ள நெத்திலி கருவாட்டை சேர்த்து, குழம்பு சற்று சுண்டி எண்ணெய் மிதக்கத் தொடங்கும் வரை கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான நெத்திலி கருவாட்டு குழம்பு தயார்.