புதுச்சேரி: அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து புதுச்சேரி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணா சிலை முன்பு நேற்று மாலை நடைபெற்றது. புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அண்ணாமலையின் உருவப் படத்தை கிழத்து எறிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அன்பழகன் பேசிய கூறியதாவது: “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கட்சியான பாஜகவை பற்றி கருத்துகளை தெரிவித்து கட்சியை வளர்ப்பதை விட்டு விட்டு அதிமுகவின் தலைவராக விளங்கக் கூடிய பொதுச் செயலாளரை தரம் தாழ்ந்து ஒருமையில் விமர்சனம் செய்ததோடு, அதிமுக தொண்டர்களையும் அவமதிக்கும் விதத்தில் பேசி உள்ளார். இதற்கு மேலும் அண்ணாமலை நாவடக்கத்தோடு பேசவில்லை என்றால் புதுச்சேரி மாநிலத்தில் அவர் எப்பொழுது கால் எடுத்து வைத்தாலும் அவருக்கு புதுச்சேரி அதிமுக சரியான பதிலடியை கொடுக்கும்.
52 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆட்சி செய்த இயக்கம் எங்களது அதிமுக. பாஜக தேசிய அளவில் 2 இடங்களை பெற்றிருந்த போது தமிழகத்தில் ஆட்சி நடத்திய இயக்கம் அதிமுக. இதையெல்லாம் சிறிது கூட தெரிந்து கொள்வதில் அக்கறை இல்லாத, முட்டாள்தனமாக கர்நாடகத்தில் அரசு பணி செய்து வந்தவர் இந்த அண்ணாமலை. 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏழை எளிய மக்களை பற்றி இந்த அண்ணாமலைக்கு ஏதாவது தெரிந்து இருக்குமா? தனக்கு ஒரு கட்சி தேவை என்கின்ற விதத்தில் பாஜகவில் இணைந்து இன்று திமுகவின் வாயாகவும், அக்கட்சியின் பி டீமாகவும் மறைமுகமாக செயல்பட்டு வருகிறார்.
அவரின் இந்த விரும்ப தகாத செயலால் தான் இண்டியா கூட்டணி புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தேசிய அளவில் பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணியில் இருந்தாலும் அந்த கட்சிகளை அழித்து ஒழித்து அந்த கட்சியை நிர்மூலமாக்கி பாஜகவில் இணைய செய்வது தான் பாஜகவின் வேலை. அதனால் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என கூட்டணியில் இருந்து வெளியேறினார். புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி உள்ளது. ஆளும் அரசின் இந்த கூட்டணியில் 23 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். ஆனால் இங்கு மக்களவை தேர்தலில் பாஜகவால் வெற்றி பெற முடிந்ததா?
ஏறத்தாழ ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியில் உள்ள பாஜக ஏன் தோல்வி அடைந்தது என இந்த அறிவு ஜீவி அண்ணாமலைக்கு தெரியுமா? தனது கட்சி ஆட்சியில் உள்ள சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியில் மக்களவை தேர்தலில் ஏன்? வெற்றி பெறவில்லை. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது எந்த இயக்கத்துக்கும் நிரந்தரம் இல்லை. அதிமுகவை பற்றி பேசினால் தான் நீங்கள் அடையாளம் காணப்படுவாய் என்பதற்காக எங்களிடம் இப்படி நடக்கக் கூடாது. இது தான் இறுதியான எச்சரிக்கை. ஒரு அதிமுக தொண்டனைக்கூட உங்களால் ஒன்றும் செய்ய முடியாது” என்று அவர் தெரிவித்தார்.