புது டெல்லி: சிவில் சர்வீசஸ் தேர்வில் ஓபிசி இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தியதாகவும், பார்வைக் குறைபாடு மற்றும் மனநலம் குன்றியவர் குறித்து தவறான தகவல்களை வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரை பிப்ரவரி 14 வரை கைது செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பூஜா கேத்கர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, பிப்ரவரி 14 வரை பூஜா கேத்கருக்கு எதிராக எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கூறியது. இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி அரசு மற்றும் யுபிஎஸ்சிக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கை பிப்ரவரி 14-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பூஜாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஒரு அதிகாரிக்கு எதிராக மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் எதிராக செய்யப்பட்ட மோசடிக்கு ஒரு பிரதான எடுத்துக்காட்டு என்று உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவு தவறானது என்று கூறி, பூஜா கேத்கர் தற்போது ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.