சென்னை: கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்கத் தவறினால், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கொசஸ்தலை ஆறு மற்றும் கனிம வள பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “கொசஸ்தலை ஆற்றுப்படுகை மற்றும் மெய்யூர், வேம்பேடு, ராஜபாளையம், சோமதேவன்பட்டு, எறையூர் போன்ற கிராமங்களில் இரவு பகலாக சட்டவிரோதமாக மணல், வண்டல் மண் எடுக்கப்படுகிறது.
இதனால் கனிம வளங்கள் அழிந்து வருகின்றன. நீர் ஆதாரம் வறண்டு கிடப்பதால் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, கொசஸ்தலை ஆற்றுப்படுகைகளில் முறைகேடாக மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்., சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, குறிப்பாக அரசு நிலங்களில் மணல் திருட்டை தடுக்க வேண்டிய வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இதற்கு உடந்தையாக இருப்பதாக மனுதாரர் குற்றம்சாட்டினார். மண் அள்ளப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. உரிமங்களில் அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே மணல் மற்றும் வண்டல் மண் அள்ளப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க சிறப்பு அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:- கொசஸ்தலை ஆற்றுப்படுகைகள் மற்றும் மணல் அள்ளும் கிராமங்களில் முறைகேடாக மணல் அள்ளப்படுவதால், அதனை தடுக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்யத் தவறினால், மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்து வழக்கை முடித்துக் கொள்ளலாம்.