வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, டொனால்ட் டிரம்ப் சீனாவுக்குச் செல்லும் தனது விருப்பத்தை தனது ஆலோசகர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்தியாவுக்குச் செல்லும் சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் விவாதித்ததாகத் தெரிகிறது.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ளார். தனது பிரச்சாரத்தின் போது, சீனாவை விமர்சித்தார். நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார். அவர் சமீபத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடினார். பதவியேற்பு விழாவிற்கு சீன அதிபரை அமெரிக்கா முறையாக அழைத்திருந்தது.
இந்த சூழலில், அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, சீனாவுடனான உறவை மேம்படுத்த சீனாவுக்குச் செல்ல விரும்புவதாக டிரம்ப் தனது ஆலோசகர்களிடம் கூறியதாக அமெரிக்க நாளிதழ் ஒன்றில் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் ஆதரவாளர்கள், அவர் இந்தியாவுக்குச் செல்வது குறித்து விவாதித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.