சென்னை: சென்னையில் காலையில் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது .
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலையில் பரவலாக மழை பெய்தது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், வேப்பேரி, அமைந்தகரை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது.