முல்தான்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 2வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
இதன் முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பனிமூட்டம் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் சிறிது கால தாமதம் ஆனது. முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 41.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 143 ரன் எடுத்திருந்தது. சாத் ஷகீல் 56 ரன்களுடனும், ரிஸ்வான் 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முன்னதாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. பனிமூட்டத்தால் இன்றும் ஆட்டம் தொடங்க காலதாமதம் ஆனது.
தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 230 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. சாத் ஷகீல் 84 ரன்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ், வாரிகன் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தான் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவில் விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 25.2 ஓவரில் 137 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வாரிகன் 31 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் நோமன் அலி 5 விக்கெட், சஜித் கான் 4 விக்கெட் வீழ்த்தினர்.
93 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் 2வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷான் மசூத் அரை சதம் கடந்து 52 ரன்னில் அவுட்டானார்.