புதுடில்லி: எழுதி கொடுப்பவர்கள் எதை எழுதி கொடுத்தாலும் ராகுல் காந்தி அப்படியே அதனை படித்து வருவதாக ஜே.பி. நட்டா விமர்சனம் செய்துள்ளார்.
பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., மட்டுமல்லாமல் இந்திய அரசையே எதிர்த்து போராடி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இவரது இந்தப் பேச்சுக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ராகுல் காந்தி பேச்சு குறித்து மத்திய மந்திரியும் பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா கருத்து தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;
இந்திய அரசுக்கு எதிராக போராடி வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். அவர்களுக்கு வரலாறு ஏதும் தெரியாது. எழுதி கொடுப்பவர்கள் எதை எழுதி கொடுத்தாலும், அதனை எங்கு வேண்டுமானாலும் ராகுல் காந்தி பேசி வருகிறார் என்பதை நான் பலமுறை சொல்லியுள்ளேன் என்று பேசினார்.