டெல்லியில் மழலையர் பள்ளி முதல் முதுகலை படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு பிப்ரவரி 8-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்று பெரிய கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. பாஜக தனது தேர்தல் அறிக்கையின் முதல் பகுதியை கடந்த வாரம் வெளியிட்டது.
இதில் பெண் வாக்காளர்களை குறிவைத்து சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று பா.ஜ.க., தேர்தல் அறிக்கையின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டது. இதில், கல்வி மற்றும் மாணவர் நலனில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள் வருமாறு:- டெல்லியில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களில் மழலையர் பள்ளி முதல் முதுகலை படிப்பு வரை ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும்.
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவித்தொகையாக ரூ. 15,000 மற்றும் போக்குவரத்து செலவுகள். தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி படிக்கும் எஸ்சி சமுதாய மாணவர்களுக்கு மாத உதவித்தொகையாக ரூ. 1,000 வழங்கப்படும். ஒன்றரை லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும். மேலும், ஆயுள் காப்பீடு ரூ. 10 லட்சம் மற்றும் விபத்து காப்பீடு ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.
குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்கப்படும். வீட்டு வேலை செய்பவர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும். ஆயுள் காப்பீடு ரூ. 10 லட்சம் மற்றும் விபத்து காப்பீடு ரூ. 5 லட்சமும், குழந்தைகளுக்கு கல்வி உதவியும், சம்பளத்துடன் 6 மாத பேறுகால விடுப்பும் வழங்கப்படும். இவ்வாறு பா.ஜ.க. வாக்குறுதி அளித்துள்ளது.