சென்னை: இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போனுக்கு அடிமையாகிவிட்டோம். சாப்பாடு இல்லாமல் கூட இருந்துவிடுவோம், ஒரு நிமிடம் கூட செல்போன்கள் இல்லையென்றால் பைத்தியம் பிடித்துவிடும்.
காலையில் எழுந்தவுடன் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டா, வாட்ஸ் அப்பில் என்னென்ன மெசேஜ்கள் வந்துள்ளது? என பார்த்தால் தான் அன்றைய தினமே சிறப்பாக இருக்கும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.
அமர்ந்துக் கொண்டு, நின்றுகொண்டு, படுத்துக் கொண்டு என நம்முடைய வசதிக்கு ஏற்ப செல்போன்களைப் பார்க்கின்றோம். இது நமக்கு சௌகரியமாக இருந்தாலும் பல நேரங்களில் பல்லேறு உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
குழந்தைகள் செல்போன்களைக் கையில் எடுத்தாலே, கூடவே ஒரு தலையணையும் எடுத்துக் கொள்வார்கள். செல்போன் அதில் வைத்து படித்துக் கொண்டே பார்ப்பது தான் பெரும்பாலான குழந்தைகளின் விருப்பமாக இருக்கும். இவ்வாறு தொடர்ச்சியாக பார்க்கும் போது, கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் வலி ஏற்படுவதோடு தசைகூட்டு வலியையும் ஏற்படுத்தும்.
உட்கார்ந்த நிலையில் செல்போன் பார்க்கும் போது கொஞ்சமாவது செல்போனின் திரை கொஞ்சம் தூரத்தில் இருக்கும். ஆனால் படுத்துக் கொண்டே செல்போன் பார்க்கும் போது, கண்களுக்கு மிக அருகில் இருக்கும். இவ்வாறு தொடர்ச்சியாக இந்த நிலையைப் பின்பற்றினால் கண்கள் சோர்வடைந்துவிடும். மேலும் கண்களில் ஈரத்தன்மையை விரைவில் இழந்து வறண்டு விட செய்யும்.
நம்முடைய வசதிக்கு ஏற்ப செல்போன்களை பல மணி நேரம் உபயோகிக்கும் போது, கழுத்து தேய்மானம், முதுகு வலி, இடுப்பு வலி, கண் தசைகளில் வலி, தோள்பட்டை வலி போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
செல்போனிலிருந்து வரக்கூடிய மின் காந்தக் கதிர்வீச்சால் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக கண்பார்வை இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் எப்போதும் எச்சரிக்கையுடன் செல்போன்களைப் பயன்படுத்த வேண்டும். மேலும் தலைவலி ஏற்படுவதோடு கண் பார்வை குறைபாடையும் சந்திக்க நேரிடும்.
நாம் படுத்துக் கொண்டே இரவு நேரத்தில் அதிகமாக செல்போன் பார்க்கக்கூடாது. இதனால் நிரந்தரமாக தூக்க பாதிப்பை சந்திக்க நேரிடும். செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க வேண்டும் என்றால், அரை மணி நேரத்திற்கு மேல் செல்போன்கள் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஒருவேளை செல்போன்களை கட்டாயம் பயன்படுத்தக்கூடிய நிலை ஏற்பட்டால், 5 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்களை சிமிட்ட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கண்களில் ஈரப்பதத்துடன் இருக்கும் மற்றும் கண் எரிச்சலை தடுக்க உதவியாக இருக்கும்.
செல்போன்களை எப்போது பார்த்தாலும் நேராக நிமிர்ந்துப் பார்க்கவும். இதனால் முதுகு மற்றும் கழுத்து வலி ஏற்பட வாய்ப்பில்லை. செல்போனை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் நாம் அன்றாடம் செல்போனை பயன்படுத்தி வருகிறோம். செல்போனை பயன்படுத்துவதற்கு என்று சில வழிமுறைகள் இருக்கிறது.
பைக்கில் செல்லும் போது அப்படியே எடுத்து பேசுவதும் கூடாது. பைக்கை நிறுத்திவிட்டு தான் பேச வேண்டும். ஸ்பீக்கரை ஆன் செய்து விட்டு பேசுவது செவிப்பறையை சேதம் ஏற்படுத்தி விடும்.
எந்த நேரமும் மொபைலில் பேசிக்கொண்டிருப்பதும் மனிதனின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். போன் பேசிக்கொண்டிருக்கும் போது காது அருகே சூடாகிக் கொண்டே இருந்தால் அந்த போனை தூர எறிவது நல்லது.
சட்டைப் பையில் செல்போன் வைப்பதை விட பேண்ட் பாக்கெட்டில் வைப்பது சிறந்தது. குழந்தைகளிடம் மொபைலை கொடுத்து பேச வைத்தலும், அதனை பார்த்து ரசித்தலும் கூடவே கூடாது.
சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கும் போது போன் வந்தால் அப்படியே பேசக் கூடாது. போன் வரும் போது தான் ரேடியேசன் இருக்கும். போன் ரிங்கிங் ஆவதை விட வைப்ரேசன் தான் அதிக ரேடியேஷனை வெளிப்படுத்தும். சைலண்ட் மோடும் ஆபத்து ஏற்படுத்தக் கூடியது தான்.