டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது. பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் 32 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 391 வீரர்கள் பங்கேற்கின்றனர். டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கண்கவர் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
பேட்மிண்டன் வீரர் லக்ஷயா சென், மைதானத்தை சுற்றி வந்த பிரதமர் மோடியிடம் தேசிய விளையாட்டு போட்டியின் தீபத்தை வழங்கினார். விழாவில் உத்தரகாண்ட் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங், முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மத்திய விளையாட்டுத் துறை இணையமைச்சர் ரக்ஷா கட்சே, உத்தரகாண்ட் விளையாட்டுத் துறை அமைச்சர் ரேகா ஆர்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர். டேராடூன், ஹரித்வார், நைனிடால், ஹல்த்வானி, ருத்ராபூர், ஷிவ்புரி, நியூ தெஹ்ரி ஆகிய 7 மையங்களில் 18 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் 38 அணிகளைச் சேர்ந்த 10,000 தடகள வீரர்கள் பங்கேற்கின்றனர்.
உத்தரகாண்ட் தேசிய விளையாட்டுப் போட்டியில் தடகளம், நீச்சல், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பேட்மிண்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளுதூக்குதல், கால்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து ஒலிம்பிக் விளையாட்டுகளும் இடம்பெறும். மேலும், பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, கோ கோ உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன. களரிபயாட்டு, யோகா, மல்லர்கம்பம் ஆகியவை பதக்கங்கள் இல்லாமல் செயல்விளக்க நிகழ்ச்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.
விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான உரிமையை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இது இந்திய விளையாட்டுகளை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்லும். “ஒலிம்பிக்கள் எங்கு நடைபெற்றாலும், அனைத்துத் துறைகளும் பயனடைகின்றன. விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த வசதிகளை உருவாக்குகிறது. விளையாட்டு வீரர்களின் திறனை மேம்படுத்த முயற்சிக்கிறோம்.
உங்களுக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். நாட்டின் வளர்ச்சியில் விளையாட்டை முக்கிய அம்சமாகக் கருதுகிறோம்,” அவர் கூறினார்.