டெல்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பொருளாதார நிபுணர்கள் பட்ஜெட்டில் சாமானியர்களுக்கு பெரிய நிவாரணம் இருக்க வாய்ப்பில்லை என கணிக்கின்றனர்.
மத்திய அரசு தாராளமய கொள்கைகளை முன்னிலைப் படுத்துவதால், அரசின் செலவுகளை கட்டுப்படுத்துதல் முக்கிய நோக்கமாக உள்ளது. இதனால் அரசு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு வாய்ப்புகள் போன்றவை குறைய வாய்ப்புள்ளது.
கடந்த 2024-2025 நிதியாண்டில் நிதி பற்றாக்குறை 4.9% ஆக இருந்த நிலையில், அதனை 4.5% ஆக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் செலவுகளை மேலும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் அரசுத் துறைகளின் சேவைகளை பாதிக்கும் நிலையில், BSNL உள்ளிட்ட நிறுவனங்களின் நிதி ஒதுக்கீடும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பலர் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். நிபுணர்கள் பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பில் சில தளர்வுகள் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கின்றனர். ஆனால், இது குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கின்றனர்.