வால்பாறை: வால்பாறை பகுதிகளில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட குறைவாக பெய்தது. இதனால் தற்போது பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தால் புற்கள், செடிகள் பச்சை நிறத்தை இழந்து காய்ந்து வருகின்றன.
நீர்நிலைகளில் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இந்நிலையில் வறட்சியை பிரதிபலிக்கும் வகையில் ஃபிளேம் ஆஃப் தி ஃபாரஸ்ட் மலர்கள் பூத்துள்ளன. கோடைக்கு முன்பே இந்த பூக்கள் பூத்துள்ளதால், வறட்சியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் வனத்துறை அதிகாரிகளும், தேயிலை விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ”எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும், நெருப்பு ஜுவாலை போல் காட்சியளிப்பதால், இந்த பூக்கள் ஃபிளேம் ஆஃப் தி ஃபாரஸ்ட் என அழைக்கப்படுகின்றன. கோடைக்கு முன்பே இந்த பூக்கள் பூத்துள்ளதால், வறட்சியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வறட்சியை தவிர்க்க கோடை மழைக்காக காத்திருக்கிறோம்” என்றார்.