கொடைக்கானல்: கொடைக்கானல் குடியிருப்பு பகுதியில் காட்டுமாடுகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கொடைக்கானல் நகர், புறநகர் மற்றும் சுற்றுலா தலங்களில் வன விலங்குகளின் தொல்லை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக காட்டு மாடுகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடியிருப்பு பகுதிகளிலும், சுற்றுலா தலங்களிலும் சுதந்திரமாக சுற்றித்திரிந்து பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சுறுத்தி வருகின்றனர். இதுவரை காட்டு மாடுகள் தாக்கியதில் பலர் பலத்த காயம் அடைந்துள்ளதுடன் சிலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று கொடைக்கானல் அருகே ஆனந்தகிரி, தாண்டிமேடு, காந்திபுரம், செயின்ட் மேரிஸ் ரோடு, அப்சர்வேட்டரி, நாயுடுபுரம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் காட்டு கால்நடைகள் முகாமிட்டன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து வீட்டுக்குள்ளேயே உள்ளனர். எனவே காட்டு மாடுகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.