விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக ஆரவ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அஜித்துடன் நடிப்பது குறித்து ஆரவ் கூறும்போது, “கார் விபத்துக் காட்சி நன்கு திட்டமிடப்பட்ட காட்சி. ஆனால் எதிர்பாராதவிதமாக விபத்து நடந்தது. விபத்துக்குப் பிறகு நடந்ததுதான் ஆச்சரியமான விஷயம். விபத்து நடந்து முப்பது நிமிடங்களுக்குப் பிறகு, மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க முடிவு செய்து அந்த காட்சியின் படப்பிடிப்பை முடித்தோம்.
பிறகு அஜித் சார் என்னை சும்மா விடவில்லை. அவரே என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். என்னுடைய எக்ஸ்ரே ரிப்போர்ட்டைப் பார்த்த பிறகுதான் அவர் நிம்மதி அடைந்தார். என்னை கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்டார். அவர் மன்னிப்பு கேட்டதும் நான் உணர்ச்சிவசப்பட்டு வாயடைத்துப் போனேன். அடுத்த நாளே அஜீத் சார் மீண்டும் படப்பிடிப்புக்கு வந்தார்.
படப்பிடிப்பை தொடங்கும் முன், ஆக்ஷன் காட்சிகளில் டூப்கள் பயன்படுத்தப்படாமல் பார்த்துக் கொண்டார். அவர் டூப்களைப் பயன்படுத்தவில்லை, ஏனென்றால் அவரது ரசிகர்கள் எப்போதும் அவரிடமிருந்து சிறந்ததை எதிர்பார்க்கிறார்கள், அவர்களை அவர் ஏமாற்றக்கூடாது. அப்போதுதான் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதற்கான காரணத்தை உணர்ந்தேன்,” என்றார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கியுள்ள படம் ‘விடாமுயற்சி’. இதில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நாடு முழுவதும் வெளியிடுகிறது.