இந்தியாவில் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகள் 123 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த காலத்தை விட 47.30% அதிக ஏற்றுமதி நடந்துள்ளது. 2019 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதி எடையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
வேளாண் மற்றும் பதப்படுத்திய உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) இதற்குக் காரணம் என கூறப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் பல்வேறு உதவிகளை பெற்றுள்ளனர். இந்திய காய்கறிகள், பழங்களுக்கு உலகளவில் அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. APEDA மூலம் உலகத் தரம் வாய்ந்த ஏற்றுமதி கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

தரம் பிரித்தல் மற்றும் பேக்கிங் மையங்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் இந்தியப் பொருட்கள் 17 புதிய சந்தைகளை சென்றடைந்துள்ளன. பிரேசில், ஜார்ஜியா, உகாண்டா, பப்வா நியூ கினி, செக் குடியரசு, கானா ஆகிய நாடுகள் இந்தியாவிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்கின்றன. சர்வதேச கண்காட்சிகளில் பங்கேற்பு, சந்தை நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தை ஆகிய நடவடிக்கைகளால் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
இந்திய உருளைக்கிழங்கு, வெங்காயம் செர்பியாவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பேபி கார்ன், வாழைப்பழம் கனடா சந்தையில் அதிகம் விற்பனையாகிறது. மாதுளைக்கு ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளில் அதிக வரவேற்பு இருக்கிறது. காய்கறி, பழங்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்க விவசாய அமைச்சகத்துடன் இணைந்து வர்த்தக அமைச்சகம் பணியாற்றுகிறது. இது இந்தியாவின் வேளாண்மை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.