சென்னை: கலவரத்தை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை விடுவிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க மறுத்துவிட்டது. 2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகவும், வன்முறையை தூண்டியதாகவும் கஞ்சனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முதல் தகவல் அறிக்கை, இறுதி அறிக்கை, சாட்சிகளின் வாக்குமூலம் ஆகியவற்றில் ஆதாரம் இருப்பதால் இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர வேண்டும் என்றார்.
வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க ஆதாரம் இல்லை என்று கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற சீமானின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். தனி நபர்களை தூண்டும் வகையில் கருத்துகளை சீமான் தெரிவித்து வருவதாக கூறிய நீதிபதி, அதுபோன்ற கருத்துகளை கூற வேண்டாம் என சீமானின் வழக்கறிஞருக்கு அறிவுரை வழங்கினார்.