பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக நேற்று பிரான்ஸ் சென்றார். அங்கிருந்து நாளை அமெரிக்கா செல்கிறார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து அரசு முறை பயணமாக பாரிஸ் சென்றார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் நேற்று இரவு அவருக்கு விருந்து அளித்தார். பாரீஸ் நகரில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இந்த நிகழ்வில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ், மற்றும் சீன வைஸ் பிரீமியர் டிங் சூக்ஸியாங் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டில் மைக்ரோசாப்ட், கூகுள் மற்றும் ஓபன் ஏஐ உள்ளிட்ட பல நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை பிரதமர் நரேந்திர மோடி நாளை முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் 3 நீர்மூழ்கி கப்பல்கள் வாங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நாளை அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் செல்கிறார்.
அவர் நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்க உள்ளார். கனடா, மெக்சிகோ, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் அதிக வரி விதித்து வருகிறார். ஆனால் நேரடியாக இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கவில்லை. இந்தியா பல பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. ஆனால் அமெரிக்காவிலிருந்து இந்தியா குறைவான பொருட்களை இறக்குமதி செய்கிறது. இந்த வர்த்தக பற்றாக்குறை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க எலக்ட்ரானிக்ஸ், மருத்துவ சாதனங்கள் மற்றும் ரசாயனங்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா பயணம் குறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது:-
அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகள் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இந்த நாடுகள் பலமுறை குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் பிரான்ஸ் ஆரம்பத்திலிருந்தே இந்தியாவிடம் சமரசப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை 1974ல் நடத்தியது.பிரான்ஸ் பல்வேறு வழிகளில் உதவியது. அணுகுண்டு சோதனைக்கு பிறகு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் இந்தியா மீது பொருளாதார தடைகளை விதித்தன. ஆனால் பிரான்ஸ் மட்டும் பக்கத்தில் இருந்தது. 1978-ல் இந்திய அணு உலைகளுக்கு யுரேனியம் வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியது.
பின் பிரான்ஸ் உதவிக்கரம் நீட்டியது. தாராபூர் அணுமின் நிலையம் அந்நாடு வழங்கிய யுரேனியத்தில் இயங்கியது. இந்தியா தனது இரண்டாவது அணுகுண்டு சோதனையை 1998-ல் நடத்தியது.இருப்பினும் மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன. ஆனால் பிரான்ஸ் இதை ஆதரித்தது. அமெரிக்காவின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், இந்தியாவுக்குத் தேவையான போர் விமானங்களையும், ஆயுதங்களையும் வழங்கினார். ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக பிரான்ஸிடம் இருந்து இந்தியா அதிக அளவில் ஆயுதங்களை வாங்குகிறது. காஷ்மீர் பிரச்னையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் தீர்மானம் கொண்டு வந்தபோது பிரான்ஸ் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதை தடுத்து நிறுத்தியது.
பிரதமர் மோடி மற்றும் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இடையேயான தற்போதைய சந்திப்பின் போது, பாதுகாப்புத் துறை தொடர்பான பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நெருங்கிய நண்பர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர். அமெரிக்க அதிபர் டிரம்ப் பல நாடுகள் மீது கூடுதல் வரி விதித்து வருகிறார். ஆனால் வர்த்தகப் பற்றாக்குறை இருந்தபோதிலும் இந்தியா மீது நேரடியாக கூடுதல் வரி விதிக்கவில்லை. டிரம்ப் ஆட்சியின் போது அமெரிக்கா-இந்தியா பாதுகாப்பு உறவு மேலும் பலப்படுத்தப்படும். போர் விமானம் என்ஜின்களை கூட்டு தயாரிப்பது மற்றும் ராணுவத்திற்கு தேவையான மேம்பட்ட கவச வாகனங்களை கூட்டு தயாரிப்பது குறித்து அதிபர் டிரம்பும் மோடியும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இவ்வாறு அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.