சென்னை: டேங்கர் லாரி ஸ்டிரைக் இன்று நடைபெற்று வரும் நிலையில், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு எரிபொருள் சப்ளை செய்யும் சென்னையைச் சேர்ந்த டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் சிலர் இன்று (ஜூலை 10) ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதனால் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தடங்கல் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் போதுமான அளவு பெட்ரோல், டீசல் இருப்பு உள்ளது. மேலும், இந்தியன் ஆயில் விநியோகஸ்தர்களுக்கு சொந்தமான டேங்கர் லாரிகள் வழக்கம் போல் இயங்கும். இதன் மூலம் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.