காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே, ஏரி நிலமாக, அரசு பதிவேட்டில் பதிவு செய்து, குடியிருக்கும் மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை, மீண்டும் நத்தம் பட்டாவாக மாற்ற, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் தாலுகா வையாவூர் அண்ணாநகர் பகுதியில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் மூன்று தலைமுறைகளாக வீடுகள் கட்டி வசித்து வந்த கிராம மக்களுக்கு, தமிழக அரசால் பல ஆண்டுகளுக்கு முன் பட்டா வழங்கப்பட்டது.
இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் வீடு கட்ட வங்கிகளில் கடன் பெற்று வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் கிராம மக்கள் சிலர் பட்டா பதிவு செய்து, அந்த நிலத்தை குடும்பத்தினருக்கு மாற்ற முயன்றபோது, அரசு வழங்கிய நத்தம் வகை பட்டா நிலம் தற்போது ஏரி நிலமாக மாறியுள்ளது தெரியவந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிர்ச்சியடைந்த வையாவூர்-அண்ணாநகர் கிராம மக்கள் நேரில் கலந்து கொண்டு, அரசு வழங்கிய நத்தம் பட்டா நிலத்தை, ஏரி நிலமாக மாற்றி, வாழ்வாதாரத்தை பாதித்து, ரத்து செய்து, பல தலைமுறையினருக்கு பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் மனு அளித்தனர்.
அப்போது, மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், கிராம மக்களின் மனுவை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கலைந்து சென்றனர்.