சென்னை: தமிழக மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி நிதி விவகாரத்தில் அரசியல் செய்வது யார் என மத்திய அமைச்சரிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை ரூ.2,152 கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் அதை வெளியிட மறுத்து புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும், மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். தமிழகம் எப்போதும் மும்மொழிக் கொள்கைக்கு எதிரானது. அதை எந்த காலத்திலும் ஏற்க மாட்டோம் என்று தெளிவாக கூறிவிட்டோம். இதில் இப்போது அரசியல் செய்ய என்ன இருக்கிறது. அரசியல் செய்வது யார்? மொழிப்போருக்கு பல உயிர்களைக் கொடுத்த மாநிலம் தமிழ்நாடு. தமிழர்களின் உரிமை கல்வி உரிமை; மொழி உரிமை. இருமொழிக் கொள்கை அரசியலில் தீவிரம் என்று எப்படிச் சொல்ல முடியும்? தமிழக அரசு, மத்திய அரசிடம் கேட்பது, தமிழக மக்களின் வரிப்பணத்தை தான்,” என்றார்.