சென்னை: தெற்கு ரயில்வேயில் உள்ள 13 ஜோடி ரயில்களில் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளதாகவும், மூன்றடுக்கு ஏசி பெட்டிகளில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாற்றம் பிப்ரவரி 21-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 2 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்டது.
இதையடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்றுமுன்தினம் வெளியிட்ட பதிவில், “ரயில் அவல வீடியோக்களை சமூக வலைதளங்களில் பார்த்திருக்கிறோம். இதைப் பார்த்துவிட்டு, சாமானியர்களுக்கு முன்பதிவில்லா பெட்டிகளை அதிகப்படுத்துவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல், ‘சேடிஸ்ட்’ அரசு மேலும் அவலத்தை சேர்த்துள்ளது. இந்நிலையில், தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
தென்னக ரயில்வே இயக்கும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி ஆதாரமற்றது, தவறானது. எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் பிப்ரவரி முதல் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டிருந்தது. இருப்பினும், மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு பெட்டிகள் தேவைப்படுவதால், தயாரிக்கப்பட்ட கூடுதல் பெட்டிகள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு பிரயாக்ராஜுக்கு சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகின்றன.
மகா கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி முடிவடைந்ததும், மார்ச் முதல் தெற்கு ரயில்வேயால் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்தப் பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படும். இதற்கான பட்டியலும் தயாராக உள்ளது. இந்நிலையில், ஈரோடு – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் – ஹைதராபாத் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் விரைவு ரயில்களில் தற்போதுள்ள 3 ஜெனரல் பெட்டிகள் 4 ஆக உயர்த்தப்படும். மேலும், புதுச்சேரி – மங்களூர் எக்ஸ்பிரஸ், விழுப்புரம் – கோரக்பூர் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் – பாலக்காடு எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி – புருலியா எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் ஏற்கனவே உள்ள முன்பதிவு இல்லாத 3 பெட்டிகள் மார்ச் முதல் 4 பெட்டிகளாக அதிகரிக்கப்படும்.
சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் – ஆலப்புழா எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை சென்ட்ரல் – மைசூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் ஏற்கனவே உள்ள முன்பதிவு செய்யப்படாத 2 பெட்டிகள் அடுத்த மாதம் முதல் 4 ஆக அதிகரிக்கப்படும். மொத்தம் 14 எக்ஸ்பிரஸ் ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகள் அதிகரிக்கப்படும். வரும் மாதங்களில் மற்ற ரயில்களில் தலா 4 முன்பதிவு இல்லாத பெட்டிகளை சேர்க்க ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.