கோவை: கிராமப்புறங்களில் பயிர் சாகுபடியில் பெரும்பாலான பணிகளை பெண்களே மேற்கொள்கின்றனர். எனவே, விவசாயம் தொடர்பான பல்வேறு புதிய தொழில்நுட்பங்களில் முழுமையாக ஈடுபட்டு மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாம் வழக்கமாக பயன்படுத்தும் ஸ்ப்ரேயர்களுடன் ஒப்பிடும்போது, ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லிகளை தெளிக்கும்போது, பூச்சிக்கொல்லியின் பயன்பாட்டு திறன் அதிகரிக்கிறது.
மேலும், தற்போது கிராமப்புறங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால், குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவில் ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்க முடியும். ட்ரோன்களைப் பயன்படுத்துவதன் மூலம் பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் நீரின் அளவைக் குறைக்கலாம். மேலும், தொழிலாளர்களின் பணிச்சுமை குறைவதோடு, சாகுபடி செலவும் வெகுவாக குறைகிறது. எனவே, சுயஉதவி குழுக்களில் உள்ள பெண்களுக்கு, இதுபோன்ற டிரோன் தொழில்நுட்பத்தை கற்று, அதன் மூலம், வருமானத்தை அதிகரிக்கும் வகையில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, ‘டிரோன்’ வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு, கடந்த ஆண்டு அறிவித்தது.
இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சுயஉதவி குழுக்களில் உள்ள 44 பெண்களுக்கு ஆளில்லா விமானங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு, அவற்றை இயக்க உரிமத்துடன் கூடிய ஆளில்லா விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் தொடர்பான விவரங்கள் ‘உழவர் மொபைல்’ செயலியில் ‘தனியார் இயந்திர உரிமையாளர்கள்’ பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் மாவட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம். விவசாயிகள் தங்களின் தேவைகளுக்காக ‘ட்ரோன் மகளிரை’ நேரடியாக கைபேசி செயலி மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.