வாரணாசி: வாரணாசியில் நடந்து வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்றார். அவருடன் 45-க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதரக அதிகாரிகளும் வந்திருந்தனர். வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள பண்டிட் ஓம்கர்நாத் தாகூர் ஆடிட்டோரியத்தில் தூதரக அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் வாரணாசி பல்கலைக்கழக துணைவேந்தர் சஞ்சய்குமார் கலந்து கொண்டார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:- பழமையான காசி நகரம், நாடு முழுவதும் கலாசார ஈர்ப்பைக் கொண்டுள்ளது. அதேபோல, தமிழகத்துக்கும் காசிக்கும் கலாசார ஈர்ப்பும், உறவும் உண்டு. இதனால்தான் காசியில் தமிழ் சங்கமம் நடத்த பிரதமர் முடிவு செய்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பூடான், கொலம்பியா, ஈராக், ஜமைக்கா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளின் தூதரக அதிகாரிகள் தமிழ்ச்சங்கம் மற்றும் இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை குறித்து தங்களது கருத்துகளையும் பாராட்டையும் தெரிவித்தனர். ராமேஸ்வரத்தில் தமிழ்ச் சங்கமம் நடைபெறுவதால் அங்கு தமிழ்ச் சங்கமம் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, இதுகுறித்து பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்று ஜெய்சங்கர் பதிலளித்தார்.