புதுடெல்லி: பொது அனுமதியை திரும்பப் பெற்ற பிறகும் பல வழக்குகளில் சிபிஐ விசாரணை நடத்த மேற்கு வங்க அரசு தொடர்ந்து ஆட்சேபம் தெரிவித்து வருவதை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. நவம்பர் 16, 2018 அன்று, மேற்கு வங்க அரசு மாநிலத்தில் சிபிஐ விசாரணை நடத்துவதற்கான பொது அனுமதியை திரும்பப் பெற்றது.
இந்நிலையில், சில வழக்குகளில், சி.பி.ஐ., மாநிலத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தியதால், மேற்கு வங்க அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், மத்திய அரசும் வாதியாக சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பை மே 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது.இந்த வழக்கில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு. வழக்குகள் பதிவு மற்றும் விசாரணையில் மத்திய அரசு எந்த வகையிலும் தலையிடுவதில்லை; கண்காணிப்பு இல்லை என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் எந்தெந்த வழக்குகளில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிடுகிறது. எனவே, இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் வாதம் ஏற்கப்படவில்லை. அரசின் பொது அனுமதி இல்லாமல், அந்த மாநிலத்தில் சிபிஐ விசாரிக்க முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக, மாநில அரசு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. இந்த வழக்கை ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அமர்வு கூறியுள்ளது.