சென்னை: பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சார்பில், எரிபொருள் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ‘சக்ஷம் 2025’ நிகழ்ச்சியின் நிறைவு விழா, சென்னையில் நேற்று நடந்தது. அமைச்சர் சக்கரபாணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:- எரிபொருளைச் சேமிக்க, பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழைகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. வனப்பகுதிகளை உருவாக்க தமிழகம் முழுவதும் மரம் நடும் பிரச்சாரம் நடந்து வருகிறது. இதற்கு பொதுமக்களும், எண்ணெய் நிறுவனங்களும் அதிக பங்களிப்பை வழங்க வேண்டும். எரிபொருள் சிக்கனம் குறித்த போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு எரிபொருள் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மாநிலத் தலைவர் எம்.அண்ணாதுரை தனது விளக்கவுரையில், “எண்ணெய் மற்றும் எரிவாயு பாதுகாப்பு, பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் செலவுகள் மற்றும் நன்மைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து, கிடைக்கும் வளங்களை சிறப்பாகவும் திறமையாகவும் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பசுமை ஆற்றலை மேம்படுத்துவதற்காக எண்ணெய் நிறுவனங்கள் பயோகேஸ், எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்கள், சிஎன்ஜி மற்றும் எல்என்ஜி நிலையங்களை அமைத்து வருகின்றன,” என்றார். இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் செயல் இயக்குநர் (சில்லறை விற்பனை) எம்.சுதாகர் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.