திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி இந்த ஆண்டுக்கான மாசி பிரம்மோற்சவம் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று துவங்கிய மாசி பிரம்மோற்சவ விழா வரும் 13-ம் தேதி வரை நடக்கிறது. இதில், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் சிம்ம வாகனம், ஆட்டுக்கிடா வாகனம், வெள்ளி மயில் வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழாவின் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா வரும் 9-ம் தேதியும், பாரிவேட்டை, வள்ளி திருக்கல்யாணம் 10-ம் தேதியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.