சீனா : தங்கக் கடாயில் சமையல்… சீனாவை சேர்ந்த இளம்பெண், ஒரு கிலோ தங்க கடாயில் சமையல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சீனாவில் ஷென்சென் ஷுய்பெய் நகர் உள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங், வர்த்தக தலைநகர் ஷாங்காய்க்கு அடுத்து சீனாவின் 3-வது பெரிய நகராக இது விளங்குகிறது. அந்த நாட்டின் மிகப்பெரிய தங்க விற்பனை மையமாகவும் செயல்படுகிறது.
ஷென்சென் ஷுய்பெய் நகரில் ஷுய்பே புபு என்ற இளம்பெண், இரு நகைக் கடைகளை நடத்தி வருகிறார். அவரது கடையில் தங்க நகை ஆபரணங்கள் மட்டுமன்றி தங்கத்திலான சமையல் பாத்திரங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. நகைக்கடை உரிமையாளரான ஷுய்பே புபு தங்க கடாயில் சமையல் செய்து சாப்பிடும் வீடியோவை சமூக வலைதளத்தில் அண்மையில் வெளியிட்டார். இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து ஷுய்பே புபு கூறியதாவது:
ஒரு வாடிக்கையாளருக்காக ஒரு கிலோ தங்கத்தில் கடாய் தயார் செய்துள்ளோம். இதன் மதிப்பு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.87 லட்சம்) ஆகும். இரும்பு, அலுமினியம் கடாயைவிட தங்க கடாயில் வேகமாக சமையல் செய்ய முடியும். வாடிக்கையாளரின் அனுமதி பெற்று எங்கள் நகைக்கடையில் தயாரிக்கப்பட்ட தங்க கடாயில் நானே சமையல் செய்து பார்த்தேன். சுவையில் எந்த வித்தியாசமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.