பெங்களூரு: “”பா.ஜ.க – ம.ஜ.த., கூட்டணி, பின்னடைவை ஏற்படுத்தும் என, ஏற்கனவே கணிக்கப்பட்டது. லோக்சபா தேர்தல் தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து, சரி செய்வோம் என, கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் கூறினார்.
கர்நாடகா உட்பட தேசிய அளவில் லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
குறைந்த தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது. தோல்விக்கான காரணம் குறித்து விசாரிக்க மூத்த தேசியத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி தலைமையில் உண்மையைக் கண்டறியும் குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.
பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கர்நாடக தலைவர்களுடன் கமிட்டி கூட்டம் நடத்தியது.
இதுகுறித்து, பெங்களூருவில் துணை முதல்வர் சிவக்குமார் கூறியதாவது: 2019 லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில், ஒரு தொகுதியில் மட்டுமே, காங்கிரஸ் வெற்றி பெற்றது. தற்போது ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளோம். ஆனால் 14 முதல் 15 தொகுதிகளில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
அது சாத்தியமில்லை. நாம் எங்கு தவறு செய்தோம் என்பதைக் கண்டுபிடித்து அதை சரிசெய்ய முயற்சிப்போம். இந்த குழு கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ஆலோசனை நடத்த உள்ளது. கர்நாடகா தரப்பிலும் நான்கு மண்டலங்களில் வெற்றி தோல்வி குறித்து கட்சி தலைமைக்கு அறிக்கை அளிக்க உள்ளேன். லோக்சபா தேர்தலில், இம்முறை மிகச் சிறந்த வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொண்டனர்.
பா.ஜ.க. ம.ஜ.த கூட்டணி பின்னடைவை ஏற்படுத்தும் என ஏற்கனவே கணிக்கப்பட்டது. எதிர்காலத்திலும், அவர்கள் ஒன்றாக இருப்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் ஒற்றுமையாக இருந்தாலும், அவர்களை எப்படி எதிர்கொள்வது என்பதை நாம் தயார் செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.