சென்னை: தமிழக அரசின் அனைத்து துறைகளின் கோப்புகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. அந்த வகையில் சட்டப் பேரவையின் செயல்பாடுகளை டிஜிட்டல் வடிவில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவை செயலக அதிகாரிகள் கூறியதாவது:கடந்த 50 ஆண்டுகளில் சட்டமன்றத்தில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகள் மற்றும் முக்கிய விவாதங்கள் இப்போது சட்டமன்ற நூலகத்தில் புத்தக வடிவில் கிடைக்கின்றன. தற்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பொதுமக்கள் பார்வைக்கு டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
இதில் கருணாநிதி, ஜெயலலிதா என்று குறிப்பிட்ட வார்த்தையை உள்ளிட்டால் அவர்கள் சொன்னது எல்லாம் வரும். காவிரி, கச்சத்தீவு போன்ற முக்கிய நிகழ்வுகளை பதிவு செய்தால் அது தொடர்பான அனைத்து விவாதங்களும் நிகழ்வுகளும் வரும். இப்பணிகள் முடிந்து, முதல்வர் விரைவில் துவக்கி வைக்கிறார். தேசிய அளவிலான இ-விதான் இணையதளத்தில், சட்டசபை நிகழ்ச்சி நிரல், கொள்கை விளக்கக் குறிப்புகள் உள்ளிட்ட தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதுதவிர கருணாநிதி நூற்றாண்டு விழா குறித்து சட்டப் பேரவைச் செயலகம் தயாரித்துள்ள புத்தகமும் விரைவில் வெளியிடப்பட உள்ளது.