திருத்தணி: திருத்தணி அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். ஆந்திர மாநிலம் கடப்பா செல்லும் விரைவு ரயில் அரக்கோணத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 6:40 மணிக்கு புறப்பட்டது. காலை 7.10 மணிக்கு திருத்தணிக்கு ரயில் வந்தபோது, இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென நடுவழியில் நின்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடப்பா விரைவு ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை ஆய்வு செய்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த பணியால், பணி மற்றும் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சிலர், ரயிலில் இருந்து இறங்கி, திருத்தணி பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து சென்று, பஸ்சில் சென்றனர்.
பின்னர், ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணி முடிந்து, 8.25 மணிக்கு கடப்பாவுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.