தண்ணீர் தற்போது சர்வதேச வியாபாரமாக மாறிவிட்ட சூழலில், அதன் சிக்கனப் பயன்பாடு மிகவும் அவசியமாக மாறியுள்ளது. இந்தப் பின்னணியில், சிங்கப்பூரில் தனி நபர் தண்ணீர் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் ஒரு நபர் தினசரி 142 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது ஒரு லிட்டர் அதிகமாகும். இந்த நிலை தொடர்ந்தால், தண்ணீர் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.
சிங்கப்பூர் அரசு வருங்காலத்தில் பெரிய அளவில் தண்ணீர் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என கருதுகிறது. வெப்ப நிலை அதிகரித்ததால், நீர்நிலைகள் ஆவியாகி தீர்ந்துள்ளன. இத்தகைய சூழலில், தண்ணீர் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகள் அவசியமாகியுள்ளது. குறிப்பாக, 2016 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் அதிக வெப்பம் பதிவானது. சராசரி வெப்பம் 28.4 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. எதிர்காலத்தில் இது மேலும் அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் அரசு நீர் சேமிப்பு கருவிகளை வீடுகளில் பொருத்தி, தண்ணீர் சேமிப்பை உறுதி செய்ய முனைவதாக உள்ளது. தற்போதைய கருவிகள் பழைய முறையில் செயல்பட்டு வருகின்றன. அவற்றை மாற்றி புதிய கருவிகள் பொருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்களுக்கு பல அறிவுறுத்தல்களும், கட்டுப்பாடுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 2030 ஆம் ஆண்டுக்குள், ஒரு நபருக்கான தினசரி தண்ணீர் பயன்பாட்டை 130 லிட்டருக்குக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை அடைய பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.
சிங்கப்பூர் அரசு, நீர் ஆதாரங்களை பெற புதிய வழிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. நீர் இறக்குமதி செய்தல், பயன்படுத்திய நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு போன்ற முயற்சிகள் இந்த புதிய வழிகளாக அமைந்துள்ளன. இதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் அதன் பயன்பாட்டை குறைக்க எதிர்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கலாம்.