ராமேஸ்வரம்: சமீபகாலமாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் அதிகரித்து மீனவர்களுக்கு சிறை தண்டனையும், கடும் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இது தமிழக மீனவர்களிடையே அச்சத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 19 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு 145 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர் பிரதிநிதிகள் டெல்லி சென்றனர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் சேசுராஜா, அமீரகம், அன்பழகன், சின்னதம்பி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை சந்தித்து பேசினர். இலங்கை கடற்படையால் மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை விளக்கி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் பிரச்னைகளுக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மற்றும் கைது செய்யப்பட்ட மீனவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். படகுகளை இழந்த மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்தார்.
பிரதமர் மோடி ஏப்ரல் மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில், தமிழக மீனவர் பிரதிநிதிகள் வெளிவிவகார அமைச்சரை நேரில் சந்தித்து மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.