பாட்னா: பீஹாரில் ஹோலி கொண்டாடும் போது, ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாபுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். அதே நேரத்தில், அவரது பாதுகாப்பு போலீஸ்காரர் சீருடையில் ஆட்டம் போட்டதற்காக இடமாற்றம் செய்யப்பட்டார்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில முன்னாள் முதல்வர்களான லாலு பிரசாத், ரப்ரி தேவி தம்பதியின் மூத்த மகன் தேஜ் பிரதாப், தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். முன்னாள் அமைச்சரான அவருக்கு போலீசார் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
ஹோலி கொண்டாட்டத்தை முன்னிட்டு, தேஜ் பிரதாப் தன் நண்பருடன் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் பாட்னா நகர வீதிகளில் சுற்றியுள்ளார். முதல்வர் நிதிஷ் குமாரின் வீட்டு அருகிலும் அவர்கள் பைக்கில் சுற்றினார்கள். வீடு திரும்பிய பின், உற்சாகத்தில் நடனம் ஆடியதேஜ் பிரதாப், தன் பாதுகாவலரான போலீஸ்காரர் தீபக் உடன் ஆடும்படி கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் பீஹாரில் பரவியுள்ளன. இந்த நிகழ்வுக்குப் பிறகு, ஆட்டம் போட்ட போலீஸ்காரர் தீபக், பாதுகாப்பு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, உடனடியாக போலீஸ் ஸ்டேஷன் பணிக்கு அனுப்பப்பட்டார்.
மேலும், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றது, இன்சூரன்ஸ் மற்றும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாதது போன்ற குற்றங்களுக்காக, பாட்னா போக்குவரத்து போலீசார் 4,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.