புதுடெல்லி: உலக ஸ்கைடைவிங் தினத்தையொட்டி மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பாராசூட் மூலம் குதித்து சாதனை படைத்துள்ளார். உலக ஸ்கை டைவிங் தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஹரியானாவில் உள்ள நர்னால் விமான தளத்தில் இருந்து புறப்பட்டார்.
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், நடுவானில் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே இறங்கினார். பயிற்சியாளர் உதவியுடன் பாராசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கினார். பயிற்சியாளர் மத்திய அமைச்சர் ஷெகாவத்தை பெல்ட்டால் கட்டிக்கொண்டு குதிக்கிறார். மேலும், மத்திய அமைச்சர் ஷெகாவத் பாராசூட்டில் இருந்து குதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதே விமானத்தில் இருந்து பாராசூட்டில் இறங்கிய மற்றொரு ஸ்கை டைவர் வீடியோ எடுத்துள்ளார். தரையிறங்கிய பிறகு, 53 வயதான மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியதாவது: இது ஒரு நல்ல அனுபவம். மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தது.
ஏரோஸ்போர்ட்ஸ் எனப்படும் விமான சாகச விளையாட்டுகள் மிகவும் உற்சாகமானவை. ஹரியானாவின் நர்னால் விமானப்படை தளத்தில் சுற்றுலாப் பயணிகள் இப்போது இந்த சாகசச் செயல்களைச் செய்யலாம். இவ்வாறு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.