சென்னை : அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை 15 ஆம் தேதி காலை உணவு திட்டம் தொடங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த திட்டம் கல்வி வளர்ச்சி நாளான ஜூலை 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில் திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.