சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள லூப் சாலையில் பொதுமக்களின் போக்குவரத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலை பகுதி அனைத்து மீனவர் கிராம ஊராட்சி மன்றம் சார்பில் மீனவர்கள் மெரினா முள்ளிக்குப்பம் முதல் நொச்சிக்குப்பம் வரை பேரணியாக சென்று நொச்சிக்குப்பம் லூப் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நொச்சிக்குப்பம் முதல் முள்ளிக்குப்பம் வரையிலான 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது கறுப்புக்கொடி ஏந்தியும், கறுப்பு ஆடை அணிந்தும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மெரினா லூப் ரோட்டில் போராட்டம் நடந்ததால், இந்த சாலையின் நுழைவு வாயில் தடுப்புகள் அமைத்து, மீனவர்கள் அந்த வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். போராட்டம் குறித்து நொச்சிக்குப்பம் மீனவர் சங்க உறுப்பினர் பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-

மெட்ரோ ரயில் பணி காரணமாக மெரினா காமராஜர் சாலையில் இருந்து சாந்தோம் சாலைக்கு செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசலைத் தவிர்க்க மெரினா லூப் சாலை ஒருவழிச் சாலையாகப் பயன்படுத்தப்பட்டது. தற்போது, மெட்ரோ பணிகள் முடிவடைந்த பின்னரும், இந்த சாலை பொது போக்குவரத்து சாலையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வழியாக அதிவேகமாக வரும் வாகனங்களால் தினமும் விபத்துகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமின்றி, வாகன ஓட்டிகளுக்கும், மீனவர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது.
இது மீனவர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. எனவே, லூப் ரோட்டில் பொது வாகன போக்குவரத்தை ரத்து செய்ய வேண்டும். தீர்வு கிடைக்கும் வரை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மீனவ கிராமங்களிலும் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். எங்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு ஏற்காவிட்டால், பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். எதிர்வரும் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிக்க எங்கள் பகுதிக்கு யாரும் வர அனுமதிக்க மாட்டோம். எங்களின் கோரிக்கையை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சாந்தோம் நெடுஞ்சாலையில் நேற்று காலை 10 மணி முதல் மெரினா லூப் சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.