முருங்கைக்கீரையானது அதன் அதிக ஊட்டச்சத்து மதிப்பு காரணமாக ஒரு சூப்பர் ஃபுட் என கருதப்படுகிறது. இதில் வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் முக்கியமான அமினோ அமிலங்கள் ஏராளமாகக் காணப்படுகிறது. முருங்கைக்கீரையை வீட்டிலேயே பொடியாகச் செய்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போதெல்லாம் எளிமையாகப் பயன்படுத்த முடியும்.
நமது அபிமான காலை உணவான இட்லி, தோசையுடன் தொட்டு சாப்பிட இட்லி பொடியுடன் முருங்கைக் கீரையைக் கலந்து பயன்படுத்தலாம். இதன் மூலம் நமது உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. உடல் எடையைக் குறைக்கத் தீவிரமான உடற்பயிற்சி மற்றும் எவ்வளவோ முயற்சித்த பின்னரும் பலன் கிடைக்கவில்லை என்றால் கட்டாயமாக முருங்கைக்கீரை சாப்பிடலாம்.
இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, உயர் ரத்த அழுத்தக் கட்டுப்பாடு என முருங்கை மூலமாகக் கிடைக்கின்ற பலன்கள் ஏராளமாக உள்ளது. முருங்கைக் கீரை பொடியை அடிக்கடி சாப்பிட்ட வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண் நோய், கபம், மந்தம் போன்ற அனைத்தும் குணமாகும். மேலும் உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு முறையாவது முருங்கைக்கீரை சாப்பிட்டு வர வேண்டும். முருங்கைக் கீரை பொடியை வீட்டிலேயே தயாரிக்க முருங்கைக் கீரை ஒரு கட்டு, வேர்க்கடலை இரண்டு டேபிள் ஸ்பூன், மல்லி இரண்டு டீஸ்பூன், புளி சிறிதளவு, கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், உளுந்தம் பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 10, கருப்பு எள் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் 1/4 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு அனைத்தையும் பயன்படுத்தி முருங்கைக் கீரை பொடி செய்யலாம்.
முதலில் முருங்கைக் கீரையின் காம்புகளை நீக்கி அதன் நிலைகளை சுத்தமாக ஆய்ந்த பிறகு அவற்றைத் தண்ணீர் கொண்டு நன்றாக அலசி தண்ணீர் முழுவதுமாக வடிகட்டி எடுக்க வேண்டும். பின்பு காட்டன் துணி ஒன்றை எடுத்து அதன் மேல் இந்த அலசி வைத்துள்ள முருங்கை இலையைப் பரப்பி நன்றாகத் தண்ணீர் இல்லாமல் உலர வைத்து எடுக்க வேண்டும். பின்னர் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து சூடானதும் அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, வேர்க்கடலை மூன்றையும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். இவை அனைத்தும் லேசாக சிவந்த பிறகு அவற்றுடன் சீரகம், மல்லி, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போன்றவற்றைச் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.