சென்னை: தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் இடம்பெற்ற ஒரு நிகழ்வை மையமாக கொண்டு எழுந்துள்ள சர்ச்சை தற்போது புதிய பரிமாணம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த அகில இந்திய முஸ்லீம் ஜமாஅத்தின் தலைவர் சகாபுதீன் ராஸ்வி, நடிகர் விஜய்க்கு எதிராக கடுமையான கருத்துகளை தெரிவித்திருந்தார். அதற்கும் எதிராக, தற்போது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

மார்ச் 7ம் தேதி ரமலான் நோன்பு திறப்பு விழாவில் விஜய் கலந்து கொண்டு தொழுகையிலும் பங்கேற்றதையடுத்து, சகாபுதீன் ராஸ்வி வெளியிட்ட அறிக்கையில், விஜய்யை கடுமையாக விமர்சித்திருந்தார். இஸ்லாமியர்கள் இவரோடு தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும், அவரை எந்த இஸ்லாமிய நிகழ்ச்சிக்கும் அழைக்கக்கூடாது என்றும் கூறியிருந்தார்.
விஜய், தனது திரைபிரபலத்தை அரசியலுக்கு பயன்படுத்துகிறாரெனவும், தனது சில படங்களில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், குடிகாரர்கள் மற்றும் சூதாட்டக்காரர்களை இஃப்தார் விருந்துக்கு அழைத்து, அவை புனிதம் இழந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி, ராஸ்வியின் இந்த கருத்துகளை கண்டித்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ராஸ்வி யார் என்பதை மக்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
CAA மற்றும் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர் ராஸ்வி என்றும், பாஜகவின் அகண்ட பாரதக் கனவை நம்புவதாக கூறியவர் என்றும் ஷிப்லி விளக்குகிறார்.
தமிழ்நாட்டின் அரசியல் சூழலுக்கு எதுவும் தொடர்பில்லாத ராஸ்வி, இங்கு தனது கருத்துகளை புகுத்த முயல்வது உண்மையில் பாசிச வாதிகளின் எண்ணத்தைக் காட்டுவதாக அவர் குற்றம்சாட்டுகிறார்.
விஜய் கடந்த வாரங்களில் வக்ஃப் மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு, தவ்ஹீத் ஜமாஅத் சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக முஸ்லிம் சமூகத்தினரிடையே ஆதரவும் உருவாகியுள்ளதுடன், பாசிச ஆதரவு கருத்துக்களுக்கு எதிராக இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் கண்டனமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தச் சூழல், தமிழ் அரசியலில் விஜயின் நகர்வுகள் மற்றும் மத அறிஞர்கள் பங்குகள் குறித்து புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.