ராஜபாளையம்: அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த விவகாரத்தில், குதிரை பேரம் மற்றும் ஏமாற்று வேலை நடந்ததாக கூறப்படும் கருத்திலிருந்து தான் மாறுபடுவதாக மதிமுக பொதுச்செயலாளர் Vaiko தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவைச் சேர்ந்த நான்கு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததை பலரும் விமர்சித்து வருவதாக குறிப்பிட்டார். ஆனால் அதனை குதிரை பேரம் அல்லது ஏமாற்று வேலை என்று கூறுவதில் தமக்கு உடன்பாடு இல்லை என்றார்.
2009ஆம் ஆண்டு மதிமுக எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் அப்போது அதிமுக அமைச்சராக இருந்த Anitha Radhakrishnan ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து திமுகவில் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை நினைவுகூர்ந்தார்.
அன்று அவர்கள் செய்ததைத் தான் இன்று அதிமுகவைச் சேர்ந்த நான்கு எம்எல்ஏக்களும் செய்துள்ளதாக கூறிய அவர், அப்போது யாரும் விமர்சிக்கவில்லை என்றும், தற்போது அதிமுகவினர் அதே பாதையை பின்பற்றியுள்ளனர் என்றும் தெரிவித்தார். இந்த விவகாரத்தை தான் ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை என்றும் கூறினார்.
மேலும், ராஜபாளையம் மற்றும் சங்கரன்கோவில் பகுதி விவசாயிகளுக்குப் பயன்படும் உள்ளாறு திட்டத்தை நிறைவேற்றவும், தென்காசி மாவட்டத்தில் உள்ள செண்பகவல்லி அணையை சீரமைக்கவும் வலியுறுத்தி ஜூன் 5ஆம் தேதி வாசுதேவநல்லூரில் தன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.