திருக்கானூர்பட்டி: தஞ்சை அருகே திருக்கானூர்பட்டி – வல்லம் சாலையில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த உளுந்து செடிகளை காய வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுகிறது. பம்ப் செட் வசதியுள்ள இடங்களில் கோடையிலும் நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறுவை, சம்பா அறுவடைக்கு பின்னர் பல பகுதிகளில் கடலை, மக்காச்சோளம், கரும்பு, எள், பயறு, போன்றவையும் சாகுபடி செய்யப்படுகிறது.
இதில் குறைந்த செலவில் அதிக மகசூல் அளிக்கும் உளுந்து சாகுபடியை விவசாயிகள் அதிகளவில் மேற்கொள்கின்றனர். குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் புதுப்பட்டி, ஒரத்தநாடு, திருக்கானூர்பட்டி, வண்ணாரப்பேட்டை, ஆலக்குடி, திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, வல்லம் உட்பட பல பகுதிகளில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது சம்பா, தாளடி முடித்த விவசாயிகள் அடுத்ததாக உளுந்து சாகுபடி செய்யும் முனைப்பில் உள்ளனர்.
முன்னதாகவே உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடைப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில 10 நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் அறுவடை செய்ய முடியாமல் இருந்த விவசாயிகள் தற்போது மும்முரமாக உளுந்து அறுவடை செய்து வருகின்றனர். அறுவடை முடித்த உடன் உளுந்து செடியை காயவைக்கும் பணியும் நடந்து வருகிறது. தற்போது பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் விவசாயிகள் உளுந்து செடிகளை காயவைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் திருக்கானூர்பட்டி – வல்லம் சாலையில் விவசாயிகள் உளுந்து செடிகளை காயவைத்துள்ளனர்.
புரதச்சத்து மிகுந்த உளுந்து, குறுகிய காலத்தில், மிகக்குறைந்த செலவில் விவசாயிகளுக்கு அதிக லாபத்தை அளிக்கும் பயிராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.